மாஸ்டர் 100 க்கு 43 மார்க். முழு வமர்சனம் | Master Review and Rating

 விஜய் - வழக்கமான விஜய் இல்லை. ஹீரோயிச பிம்பம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிரே ஷேடு கேரக்டரில் வெளுத்துவாங்குகிறார்



அலட்டிக்கொள்ளாத வாத்தியும் அடாவடி கேங்ஸ்டரும் மோதும் அதிரடியான கண்ணாமூச்சி ஆட்டமே ‘மாஸ்டர்.’


ஜே.டி - பகலில் மாணவர்களுக்கு அறிவூட்டும் போதி மரம், இரவில் ரத்தத்திற்குச் சமமாக ஆல்கஹாலை உட்தள்ளும் குடிநோயாளி. மாணவர்களுக்கு ஆதரவாய் அவர் கல்லூரி மேனேஜ் மென்ட்டிடம் வம்பு வளர்க்க, தற்காலிக விடுமுறையில் வீட்டுக்கு அனுப்புகிறது நிர்வாகம். வாத்தியாராக ஜே.டி. செல்லும் திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களைத் தன் வளர்ச்சிக்காகக் கொடூரமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் பவானி என்கிற ரவுடி. குடியைக் கைவிட்டு ‘மாஸ்டர்’ களமிறங்க, இறுதியில் யார் ஜெயிக்கிறார் என்பதுதான் (தெரிஞ்ச விஷயம்தானே!) மீதிக்கதை.



விஜய் - வழக்கமான விஜய் இல்லை. ஹீரோயிச பிம்பம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிரே ஷேடு கேரக்டரில் வெளுத்துவாங்குகிறார். அலட்சிய உடல்மொழி, வயதாவதைத் தயங்காமல் வெளிக்காட்டிக்கொள்ளும் மேனரிசம், டிரேடு மார்க் ஆக்‌ஷன் அவதாரம், குசும்பான ஹியூமர் என ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி. விஜய்க்கு இணையாக ஃப்ரேமில் ரகளை ரவுடியாக நிறைந்து நிற்கிறார் விஜய் சேதுபதி. குத்திக்கிழிக்கும் மிரட்டல் வில்லத்தனமும் ‘நீ யாரா இருந்தா என்ன’ என்கிற நக்கல் நையாண்டி பாவனைகளுமாக பவானி... பக்கா! மாஸ்டரைத் தாங்கும் கிராண்ட் மாஸ்டர்கள் இவர்கள் இருவரும்தான். அர்ஜுன்தாஸைத் தவிர படத்தில் இருக்கும் ஏனைய 100 பேருக்கும் கேமரா முன் வந்துபோவதைத் தவிர வேறு வேலையில்லை.


மாஸ்டர் - சினிமா விமர்சனம்



கேட்டுப் பழகியதால் ‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’ இரண்டு பாடல்கள் மனதில் நிற்கின்றன. மிச்சப்பாடல்களிலும் பின்னணி இசையிலும் இன்னும் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம் அனிருத். சத்யன் சூரியனின் கேமராக்கண்கள் மெட்ரோவுக்கும் கிராமத்துக்குமாக, இருளுக்கும் பகலுக்குமாக ஊடாடித் திரிவதில் நமக்குத் தொற்றிக்கொள்கிறது பரபரப்பு.


போதையில் முங்கியெழும் ஆனால் அறம் பேசும் வாத்தியார் - குடியை ஒதுக்கும், கொலைக்கு அஞ்சாத ரவுடி போன்ற கதாபாத்திர வரைவுகளில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல்பாதியில் படபடவென லோகேஷ் ஸ்டைலில் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வழக்கமான கமர்ஷியல் ரூட்டில் தட்டுத் தடுமாறி முன்னகர்கிறது.


சிலபஸைக் குறைத்து, சொல்லித்தரும் முறையை இன்னமும் விறுவிறுப்பாக்கியிருந்தால் இன்னுமே ‘மஜா’வாகவே வரவேற்றிருக்கலாம் வாத்தியை!

Comments